சென்னை: ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை வேகப்படுத்தும் வகையிலும் பிப்ரவரி 24க்குள் திறக்க ஏதுவாக, ஓய்வுபெற்ற பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜனை சிறப்பு அலுவலராகத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை, எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் நினைவு மண்டபம், ரூ.50.80 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணியை, கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு, பகலாகப் பணிகள் நடந்து வருகிறது. இவ்வேளையில் நினைவிட கட்டுமான பணிகளை வேகப்படுத்தும் வகையிலும், பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் திறக்க ஏதுவாக, ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜனை சிறப்பு அலுவலராகத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணியைக் கண்காணிக்க சிறப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்த தினம் அல்லது ஜெயலலிதா பிறந்த தினத்தன்று, நினைவிடம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.