தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி ஓமன் நாட்டிலிருந்து திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் இறுதி வாரம் முதல் கரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கியது.
இந்தத் தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதில் முன்களப் பணியாளர்கள், குறிப்பாக மருத்துவர்களின் பங்கு முக்கியமானது. இவர்களது ஓய்வறியாத உழைப்பாலேயே பல ஆயிரம் பேர் கரோனா தொற்றிலிருந்து தொடர்ந்து குணமடைந்துவருகின்றனர். தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் இன்னுயிரைக் காக்க மருத்துவர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்த வகையில், ஐந்து மாதங்களாக வீட்டிற்குச் செல்லாமல் சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவில் வார்டில் பணியாற்றும் மருத்துவர் ரமேஷ், சேலத்தில் உள்ள தனது மகனின் பிறந்தநாளை செல்போன் வழியாகவே கொண்டாடியுள்ளார்.
எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களைப் போல, இந்தக் கரோனா காலத்தில் மருத்துவர்கள் தங்கள் குடும்பங்களையும் நண்பர்களையும் விட்டுப் பிரிந்து மக்கள் நலன் காக்கப் போராடிவருகின்றனர். இருப்பினும், மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களைக் காக்க தமிழ்நாடு அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக எழுந்துள்ளன. மருத்துவர்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன்களப் பணியாளர்களாக மருத்துவர்கள் உள்ளனர்.
இப்பணிகளில் ஈடுபடும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு வசதிகளைத் தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது. மருத்துவர்கள் உள்பட மருத்துவத் துறையில் உள்ள சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தினரை மாதக் கணக்ககில் பிரிந்து இங்கே பணியாற்றுகிறார்கள்.
மக்களுக்காகப் பணிபுரியும் இவர்களின் சேவையை அரசு கவுரவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மருத்துவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், சிகிச்சையளிக்கும்போது உயிரிழக்கும் மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்" என்றார்.
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர், மருத்துவர் சாந்தி கூறுகையில், "மருத்துவர்களைக் கணக்கிடும்போது அரசு மருத்துவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது.
தனியார் மருத்துவர்களையும் கணக்கில்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கரோனா தொற்றால் இறந்துள்ளதாக ஐ.எம்.ஏ. என்கிற அமைப்பு கூறியுள்ளது. ஆனால், நம் சுகாதாரத் துறை அமைச்சர் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
உண்மையில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு வழங்குவதாகக் கூறிய 50 லட்சம் ரூபாய் என்ன ஆனது, இறந்தவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை என்ன ஆனது, இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்ல மறுப்பது ஏன்?
நாள்தோறும் வெளியிடப்படும் ஊடகச் செய்திக் குறிப்புகளில் மருத்துவர்களில் எத்தனை பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரங்களையும் வெளியிட்டு அரசு தனது வெளிப்படைத் தன்மையை நிரூபிக்க வேண்டும்" எனக் கூறினார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் போன்று இன்னும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து, பல மாதங்களாக பொது மக்கள் உயிர்களைக் காக்க போராடிவருகின்றனர். இவர்களின் சேவைகளைப் பாராட்டவும் கவுரவிக்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் திமுக அமைச்சர் ரகுமான் கான் காலமானார்