சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை தமிழ்நாடு அரசால் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. உலகில் உள்ள 180 நாடுகளைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒருங்கிணைந்து நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசாணை: முதலமைச்சர் தலைவராக உள்ள இந்த குழுவில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், மக்களவை உறுப்பினர் ராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலர், விளையாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
முதலமைச்சர் தலைவராகவும், 23 நபர்கள் உறுப்பினர்களாகவும் நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இக்குழு அவ்வப்போது கூடி ஆய்வுக் கூட்டங்கள் மேற்கொண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் - உதயநிதி'