இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இளம் வயது முதல் பொது வாழ்வில் தம்மை ஈடுபடுத்தி வருகிறார். மக்களின் பிரச்னைகளுக்காக நீதிமன்றம் வரை சென்று போராடி வரும் இவர், கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தியாகராய நகர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்பில் வாழ்ந்து வந்தார். அங்கு இலவசமாக இருக்க விரும்பாமல் வாடகையும் செலுத்தி வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பகுதியில் புதிய வீடு கட்டுவதற்காக அந்த குடியிருப்பில் அனைவரையும் காலி செய்ய சொல்லி அரசு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. இதையடுத்து, திடீரென நேற்று வந்த வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் நல்லகண்ணுவையும் சேர்த்து வீட்டை காலி செய்ய வைத்தனர். மாற்று வீடு வேண்டும் என கோரிக்கை வைக்காமல் உடனே அவர் கே.கே. நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.
அதிகாரிகளின் இந்த செயலுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்ததோடு மூத்த அரசியல் தலைவரான நல்லகண்ணுவுக்கு உடனடியாக மாற்று வீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் நல்லகண்ணு, 'கக்கன் குடும்பத்திற்கு வீடு வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். தொடர்ந்து நல்லகண்ணுவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 'வீடு வழங்க அரசு கொள்கை முடிவு எடுக்கும்' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு, பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதே போன்று கக்கன் குடும்பத்தினருக்கும் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.