சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்ட முறைச்சாரா மாநாட்டிற்காக, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினரின் உழைப்பினை பாராட்டுவது தொடர்பாக, சென்னை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் சுதாகர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, தமிழ்நாடு காவல் துறைக்குச் சவால் மிகுந்த பணியாக இருந்தாலும். அதனைச் சிறப்பாக எதிர்கொண்டோம். பாதுகாப்பில் வெற்றிக்கரமான இந்த செயல்பாட்டிற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடு காவல் துறையினரும் காரணம்.
மேலும், ஒரு நாட்டின் அதிபர், சென்னை விமான நிலையத்திலிருந்து 50 கிமீ-க்கும் அதிகமாக தன்வழிப்பயணம் மேற்கொள்ளும் போது, அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிச் சிறப்பாக செய்துவந்தோம். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் காவல்துறையினர், ஆயிரம் ஹோம் கார்டு என ஏராளமானோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
110 உதவி ஆய்வாளர்கள் தலைமையில், 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, ஒட்டுமொத்த சென்னையும் ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில் சாதாரண குப்பைத் தொட்டியில் குண்டு வைக்கக்கூடும் என்கிற அளவிற்கு “கிட்டத்தட்ட குற்றவாளிகள் மனநிலையிலிருந்தே யோசித்து” பாதுகாப்பைப் பலப்படுத்தினோம்.
'ஜம்மு காஷ்மீர் விவகாரம்: அப்பட்டமாக பொய் பேசும் மோடி, அமித் ஷா' - பிருந்தா காரத்!
எத்தனை காலி இடங்கள், உயர் மின் பகிர்மானிகள் எனக் கணக்கிட்டு ஒன்று விடாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், நிகழ்வு முடியும் வரை எங்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் சிறப்பாக முடிந்தது. இதற்காகப் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தாலும், அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு என்பது முக்கியமானது என்பதால் இந்த நேரத்தில் சென்னை மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.