இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா கூறியதாவது, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைகழகம் மூன்றாண்டுகள் நடத்தும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் கடந்த 28.12.2018-ம் தேதி அன்று உயர் கல்வித்துறை செயலாளர் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மற்றும் முதுகலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துவது குறித்து அரசாணையை வெளியிட்டிருக்கிறார். அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தலைவராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் இணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு போடப்பட்ட அரசாணையின்படி வரும் கல்வியாண்டு மற்றும் அடுத்து கல்வியாண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில் தன்னை கலந்தாலோசிக்காமல் கலந்தாய்வு நடத்துவதற்குரிய குழுவினை மாற்றி அமைத்து உயர்கல்வித்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதனை ரத்து செய்ய வேண்டுமென ஏற்கனவே அரசுக்கு கடிதம் எழுதி இருந்தேன், தற்போது பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வினை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தினால் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துழைக்காது என தமிழக அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன், என்றார்.
மேலும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த ஆண்டிற்குரிய கலந்தாய்வு நடத்துவதற்கு அரசாணையை மாற்றித் தர வேண்டும் எனவும் சூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.