இதுகுறித்து பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "சமூக நலன் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றார் மகாகவி பாரதி. அதற்கேற்றார்போல ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் 1989ஆம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது.
மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.
இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரைபயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் 6 இலட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன் முயற்சிக்காக, வரவுசெலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: பட்ஜெட் - நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு