சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் நல்லாட்சி நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்தாண்டு வாஜ்பாயின் 97ஆவது பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஐந்து நபர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ, மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய குஷ்பூ, 2024இல் மிகப்பெரிய வெற்றி பாஜகவுக்கு கிடைக்க உள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் என்னதான் குரல் கொடுத்தாலும் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மீண்டும் மோடிதான் வரப் போகிறார் எனவும் தெரிவித்தார்.
அண்ணாமலை பேசுகையில், "இந்தியாவில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டிருந்தன. 2014 லிருந்து 2017 வரை அதை மீட்டு 24 சிலைகள் இந்தியாவுக்கு, கொண்டுவந்துள்ளார் மோடி. 200 நாடுகளில் இதேபோல சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் ஒரு மெகாவாட் சோலார் யூனிட் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. கல்லா கட்டும் வேலையைத்தான் இங்குள்ளவர்கள் செய்துவருகின்றனர்.
பாஜக இப்போதுதான் warm upஇல் உள்ளது. வரும் 13, 14ஆம் தேதி மதுரையில் தங்கப்போகிறேன். பாஜகவினர் இதேபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் தங்கி அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். பொங்கல் முதல் தமிழ்நாடு முழுவதும் கிராம கிராமமாகப் பாத யாத்திரை நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தோ-பசுபிக்: ஜெய்சங்கர், பிளிங்டன் தொலைபேசி உரையாடல்