சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனையடுத்து சென்னை முழுவதும் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. முன்னதாக திபெத்தை, தனி நாடாக அறிவிக்ககோரி சீனாவுக்கு எதிராக, திபெத்தியர்களின் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சீனாவுக்கு எதிராகப் போராடக்கூடியவர்கள் சென்னையில் சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் சந்தேகத்திற்கிடமான 21 திபெத்தியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, சேலையூர் காவல் நிலையத்தினர் எட்டு திபெத்திய மாணவர்களைக் கைது செய்த நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் டென்சிங் நூர்பு என்பவரை நீலாங்கரை காவல் நிலையத்தினர் கைது செய்துள்ளனர்.
டென்சிங் நூர்பு கடந்த சில ஆண்டுகளாகவே திபெத் தொடர்பான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வேறு யாரேனும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி, சீன அதிபரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நிகழக் காரணம் என்ன தெரியுமா?