சென்னை: போலி ஆவணங்கள் மூலமாக கடன்பெற்று இந்தியன் வங்கிக்கு, ரூ.39.18 கோடி இழப்பு ஏற்படுத்திய இரண்டு கம்பெனிகள் மற்றும் இயக்குநர்கள் உள்பட 6 பேருக்கு, தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, டெல்லியில், 'கிரண் ஓவர்சீஸ் லிமிடெட்' என்ற பெயரில், தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று 39 கோடியே 18 லட்சம் ரூபாய் இந்தியன் வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் ரஞ்சீவ் பத்ரா, அவரது மனைவி கிரண் பத்ரா, வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், சீனிவாசன் உள்பட 12 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை இன்று (செப்.22) விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.தனசேகரன், நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்பட 6 பேருக்கு, தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
வங்கி அலுவலர்கள் சீனிவாசன், கோபால கிருஷ்ணன், சண்முக சுந்தரம், ருப்பாய் ஆகியோர் வழக்கு விசாரணையின் போது இறந்து விட்டதால், அவர்கள் மீதான வழக்கை நீதிமன்றம் கைவிட்டது.
இதையும் படிங்க: 'என்ஐஏ தமிழ்நாட்டில் நுழையத்தடை விதிக்கவேண்டும்' - எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் முபாரக்