தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் 2, 3, 4, 5, 7, 8 , 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதில் இரண்டாம் வகுப்பு சூழ்நிலை அறிவியல் பாடப்புத்தகத்தில் தேசிய கீதம் எழுத்துப் பிழையுடன் அச்சடிக்கப்பட்டிருந்தது.
இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், முதன்மைச் செயலர் பாடப்புத்தகத்தில் ஏற்பட்டுள்ள பிழை குறித்து விசாரணை நடத்திஉள்ளனர்.
அதனடிப்படையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி; பயிற்சி நிறுவனத்தில் புத்தக வடிவமைப்புப் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தைச் சார்ந்த இரண்டு பேரை உடனடியாக பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.
பள்ளி பாடப்புத்தகங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி; பயிற்சி நிறுவனம் எழுதி அளித்தாலும், அதனை தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு அளித்துவருகிறது. எனவே இந்தப் பிழைக்கு காரணம் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல்; பணிகள் கழகத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் உள்ளது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி; பயிற்சி நிறுவனம் பாடப் புத்தகங்களில் எழுதி, அவற்றை தட்டச்சு செய்து சிடியாக தமிழ்நாடு பாடநூல் கல்வியியல்; பணிகள் கழகத்திற்கு அளிக்கும். அங்கு பிழைத்திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்கள் அவற்றை முழுவதும் படித்து பார்த்து பிழைகளைத் திருத்தி அனுப்புவர். அதனைத் தொடர்ந்து பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு பின்னர் மீண்டும் பிழை இருக்கிறதா என்பதை சரி பார்ப்பதற்காக தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் உள்ள பிழை திருத்துபவரிடம் அளிக்கப்படும்.
ஆனால் சமீபத்தில் வழங்கப்பட்ட ஒன்று, இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் தேசிய கீதத்தில் பிழைகள் உள்ளதால், பிழை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் பள்ளி கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தவறுக்கு தமிழ்நாடு பாடநூல் கல்வியியல்; பணிகள் கழகம் மட்டும் பொறுப்பல்ல. பாடப்புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களும் பொறுப்பாவார்கள் என அவர் தெரிவித்தார்.