சென்னை கோயம்பபேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் திடீரென ஆம்னி பேருந்து ஒன்றில் தீப்பிடித்தது.
பின்னர் அந்த தீயானது அருகிலிருந்த மற்ற இரண்டு பேருந்துகளிலும் பரவியது. இதனால் மூன்று பேருந்துகளும் பயங்கரமாக தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் இச்சம்வம் குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்கு மூன்று தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்ற பேருந்துகளில் தீ பரவாமல் இருக்கும் வகையில் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேருந்துகளும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.