புதுச்சேரி மாநிலம், மேட்டுப்பாளையத்தில் மதுபான கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று (ஜன. 05) இரவு அடையாளம் தெரியாத மூன்று பேர் வந்தனர். அவர்கள் மூவரும் பீர் பாட்டில்களை வாங்கிக்கு கொண்டு அதற்கு பணம் தராமல் செல்ல முயன்றனர்.
பணம் கொள்ளை
அப்போது, காசாளார் கனகசபை என்பவர் அவர்கள் மூவரையும் தடுக்க முயன்ற போது, கல்லாவில் உள்ள பணத்தை எடு எனக் கூறி காசாளரின் முகம், கை, கால்களில் கத்தியால் வெட்டியுள்ளனர். இதைக் கண்டு தடுக்க வந்து கடை ஊழியர் ராஜவேலுவையையும் அந்தக் கும்பல் குத்திவிட்டு கல்லா பெட்டியிலிருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த காசாளர் கனகசபை, ஊழியர் ராஜவேலு ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிசிடிவி காட்சிகள்
பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளையில் ஈடுபட்டது ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்த ஷாருக்கான் (22), வில்லியனூர் பொறையூரைச் சேர்ந்த முகேஷ் (21), சாணரப்பேட்டையைச் சேர்ந்த ராஜ் (23) என்பது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமாராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மதுக்கடை ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பு: 3 இளைஞர்களுக்கு வலைவீச்சு!