தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு, 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.க. செல்வம் வெற்றி பெற்றிருந்தார். அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஆர். செல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரது மனுவில், கு.க. செல்வம் தலைவராக உள்ள ஸ்ரீஜெயா கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக மதுரவாயலில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான பத்து ஏக்கர் நிலம் உள்ளதாகவும், இந்த விவரத்தை அவர் தனது வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி கு.க.செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், இந்த சொத்து அறக்கட்டளையின் பெயரில் வாங்கபட்டுள்ளது எனவும் அந்த அறக்கட்டளை பொது மக்களுக்கான அறக்கட்டளை எனவும், அதில் அறக்கட்டளையின் பெயரிலேயே வருமானவரி செலுத்தப்படுவதாகவும் அவருடைய மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தேர்தல் வழக்கில் எம்.எல்.ஏ. கு.க. செல்வத்துக்கு எதிராக கூறியிருந்த குற்றசாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அவர்கள் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் சொத்து விவரங்களை வேட்பு மனுவில் தெரிவிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.