சென்னை: ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தலைமை செயலகத்தில் சந்தித்து ஒப்படைத்தார்.
பின்னர் பசுமை வழி சாலையில் உள்ள விசாரணை அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பொருத்தவரை விசாரணை வெளிப்படையாகவும், அதே நேரத்தில் அதன் ரகசியத் தன்மையை கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக 5 பாகங்கள் கொண்ட அறிக்கையை அளித்துள்ளதாகவும் மொத்தம் 3,000 பக்கங்கள் கொண்டதகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து இரண்டு பாகங்களும், மூன்றாவது பாகத்தில் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், நான்காவது பாகத்தில் வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஐந்தாம் பாகத்தில் 1,500 வீடியோ ஆவணங்கள் மற்றும் 1,250 சாட்சிகள், 1,500 காவல்துறையினரிடம் மொத்தமாக விசாரணை நடைபெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாகவும் பேரணி போன்றவற்றில் ஈடுபடும் போது பொதுமக்கள் என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை: மகிழ்ச்சி வெள்ளத்தில் அற்புதம்மாள்