தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திசையன்விளை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்து குடியிருப்பைச் சேர்ந்த அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்ததும், இதில் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மீது பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர். இதனிடையே காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், காவல் துறையினரால் தேடப்பட்டுவந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் மற்றும் சுடலைக் கண்ணன் ஆகிய இருவரும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரன் அடைந்துள்ளனர்.