காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கக்கனின் 112ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” கரோனா காலத்தில் மக்களுக்கு போதுமான வகையில் நிவாரண நிதி வழங்கப்படவில்லை. எனவே, அரசு குடும்ப அட்டைக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும். மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க ஆலோசனை கூறுவது மட்டும் அரசின் வேலையல்ல. அவர்கள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்றும் கூற வேண்டும்.
இணையதளத்தில் பாடம் நடத்துவதை குறைந்தது 5ஆம் வகுப்பு வரையாவது நிறுத்த வேண்டும். இந்த நேரத்தில் அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடாது. கரோனா சோதனைகள் தமிழ்நாட்டில் போதுமான அளவு இல்லை. எனவே அதனை அதிகப்படுத்த வேண்டும்.
கரோனா பாதித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாதது அரசின் தவறு. சாதாரண மக்கள் லட்சக் கணக்கில் செலவழித்து, தனியார் மருத்துவமனைகளில் எப்படி சிகிச்சைப் பெற முடியும். எனவே, இந்த செலவுகளை அரசே ஏற்க வேண்டும்“ என்று கூறினார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு