சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (மே.02) விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மே 17 இயக்க (May 17 Movement) ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் சட்டப்பேரவையில் நடைபெற உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய கோரிக்கை குறித்து பேட்டியளித்தனர்.
அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் மே-6ஆம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய கோரிக்கை நடைபெற உள்ளது. இந்த மானியக்கோரிக்கையில் அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை வெளியிட வேண்டும் எனவும்; அம்மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியினை உரியவகையில் செலவிட வழிவகை செய்ய வேண்டும் என விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் தெரிவித்தார்.
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்: 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தில் உள்ள பட்டியல் இனத்தவர்களுக்கான நிதி கடந்த 40 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டு எவ்வாறு செலவு செய்யப்பட்டது? ' என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று திருமுருகன் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், ’அரசின் வேலை வாய்ப்புகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பஞ்சமி நிலங்களை அரசு இலவசமாக வழங்கியது. அதனை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, அந்த நிலங்களை மீட்டுத் தரவேண்டும்.
சாதி வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: சுடுகாடு மற்றும் இடுகாடு ஆகியவற்றில் ஏற்படும் வன்முறையைத் தடுக்கும் வகையில் பட்டியல் இனத்தவர்களுக்கு சுடுகாடுகள் அமைத்துத் தரவேண்டும். சாதி வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் இழப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல், தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் மூலமாக கட்டிக்கொடுக்கும் வீடுகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை நகரங்களில் செலவு செய்கிறது. இதேபோல், கிராமப்புறங்களில் வீடு கட்டுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டும்.
அம்மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தொழில் தொடங்குவதற்கான நிதியுதவி அளிக்க வேண்டும். உயர்கல்விக்கான செலவினை அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வரும் சட்டப் பேரவை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும்’ எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.927 கோடி நிதி பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக RTIஇல் அதிர்ச்சித் தகவல்!