ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ரயில்வே ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில், “கரோனா பெருந்தொற்று பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், ரயில்வே ஊழியர்கள் மன உறுதியுடனும், தைரியமாகவும் சூழலை எதிர்கொண்டு ரயில்வே துறையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது பாராட்டத்தக்கது.
ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்பு
பெருந்தொற்றால் உலகமே உறைந்து நின்றபோது, ரயில்வே ஊழியர்கள் தங்களைப் பற்றி கவலைப்படாமல் இந்திய பொருளாதார சக்கரம் தொடர்ந்து சுழல தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். மின் நிலையங்களுக்கு நிலக்கரி, உழவர்களுக்கு உரம், உணவு தானியப் பொருள்கள், அத்தியாவசிய பொருள்கள் ஆகியவற்றை எந்த காலதாமதமுமின்றி கொண்டு சேர்த்தார்கள்.
4,621 புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்கி, 81 லட்சம் சகோதர சகோதரிகளை அவர்களது குடும்பத்தாருடன் கொண்டுசேர்த்தார்கள். 370 பாதுகாப்பு கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு முடித்தார்கள். நமக்கு உணவு தரும் உழவர்களின் அருவடைகளை நாடெங்கிலும் உள்ள சந்தைகளுக்குக் கொண்டுசேர்த்து, அவர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்கள்.
சிறப்பு ரயில்களை 96 சதவீதம் காலந்தவறாமல் இயக்கி சாதனை
இந்தச் சோதனையான ஆண்டில் முதல் முறையாக அதிகபட்சமாக 1,233 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு உள்ளார்கள். 6,015 கி.மீ ரயில் பாதையை மின்மயமாக்க உதவி புரிந்துள்ளார்கள். சரக்கு ரயிலின் வேகத்தை மணிக்கு 44 கிலோ மீட்டராக அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், சிறப்பு ரயில்களை 96 சதவீதம் காலந்தவறாமல் இயக்கி சாதனை புரிந்துள்ளார்கள்.
எந்த உயிரிழப்பும் இல்லாமல் ரயில்களைப் பாதுகாப்பாக இயக்கி உள்ளார்கள். இவ்வாறு சாதனை புரிந்த ரயில்வே ஊழியர்களின் கடமை உணர்வு, சிறந்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடமை உணர்வு கொண்ட ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து பழைய சாதனைகளை முறியடித்து, இந்தியப் பொருளாதாரம் மேம்பட பணியாற்றுவார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'தந்தையின் வழியில் திமுக உடன்பிறப்புகளுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்'