சென்னை: சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கே.கே. நகரைச் சேர்ந்த குருசாமி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவருவதாகவும், தன்னுடைய காரை ஒருவர் திருடிச் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சாஸ்திரிநகர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சிசிடிவியை வைத்து விசாரணை நடத்திவந்தனர். புகார் அளித்த சில மணி நேரத்திலேயே போக்குவரத்துக் காவல் துறை உள்ளிட்ட அனைவருக்கும் அலர்ட்செய்யப்பட்டு காரைத் தேடினர். ஆனால் காரை திருடிய நபர் பல இடங்களில் காரை நிறுத்தி நான்கு மணி நேரம் கழித்து எடுத்துச் சென்றது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
செக்யூரிட்டியாக சேர்ந்து குட்டியானை வாகனம் திருட்டு
இவ்வாறாக ஒன்றன்பின் ஒன்றாகக் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை சாஸ்திரி நகர் காவல் துறையினர் சோதனை செய்துள்ளனர். இறுதியாக மகேந்திரா சிட்டிவரை சென்ற திருடிய கார் அதன் பிறகு பதிவாகவில்லை. இதனால் காவல் துறையினர் ஏமாற்றமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சில நாள்களிலேயே தேனாம்பேட்டையில் உள்ள தற்போதைய ஒன்றிய அமைச்சர் ஒருவரின் உறவினராக உள்ள மனோகர் என்பவரிடம் கார் ஓட்டுநராகச் சேர்ந்த அந்த நபர், முதல் நாளிலேயே அவருடைய காரைத் திருடிச் சென்றுவிட்டார்.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் தேனாம்பேட்டை காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். ஆனால் அதுவும் பாதியில் நின்றுவிட்டது. இதேபோல் செப்டம்பர் 22ஆம் தேதி கோவை பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலைசெய்து அங்குள்ள குட்டி யானை என்ற வாகனத்தையும் திருடிச் சென்று இருக்கிறார் அதே நபர்.
அநாதை ஆசிரமத்தில்...
இந்நிலையில் சாஸ்திரிநகர் தனிப்படை காவலர்கள் மூன்று சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பதை உறுதி செய்துகொண்டனர். மேலும் தேனாம்பேட்டையில் காரை திருடியபோது காரினுள் இருந்த ஓட்டுநர் மாதவன் என்பவரது ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தது தெரியவந்தது.
சைபர் கிரைம் காவல் துறையினரின் உதவியுடன் இந்த ஆவணங்களை வைத்து அவர் புதிய செல்போன் இணைப்பைப் பெற்றதைக் கண்டுபிடித்தனர். அந்த இணைப்பை வைத்து சோதனை செய்தபோது அது நாகர்கோவில் இருப்பிடத்தைக் காண்பித்துள்ளது. அங்குச் சென்றபோது நாகர்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் இருந்த ஏழுமலை என்ற மணிகண்டனை (27) கைதுசெய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நாகர்கோவிலைப் பூர்விகமாகக் கொண்ட ஏழுமலை சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்துவிட்டதாகவும், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அநாதை ஆசிரமத்தில் சகோதரியுடன் வளர்ந்துவந்ததும் தெரியவந்தது.
திருடிய வாகனங்கள் குறைந்த விலைக்கு விற்பனை
பத்தாம் வகுப்புவரை படித்த ஏழுமலை அதன்பின்பு அங்குள்ள கார் மெக்கானிக் கடையில் சிறிது காலம் வேலை பார்த்திருக்கிறார். மெக்கானிக் கடையில் வேலை பார்த்தபோது அங்கு வந்த கார்களின் மீது ஏழுமலைக்கு மோகம் ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னர் வேலைக்காக சென்னை நோக்கிச் சென்ற ஏழுமலை, 2011ஆம் ஆண்டு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஆட்டோவைத் திருடியுள்ளார்.
இவர் பல பெயர்களில் பல கெட்டப்புகளில் வலம்வந்துள்ளதையும் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி இவர் தேவா, மாதவன், கார்த்திக் எனப் பல பெயர்களில் வலம்வந்துள்ளார். மேலும் விசாரணையில் சிறுவயதில் இருந்தே கார் ஓட்டுவதுதான் தனக்கு மிகவும் பிடித்தமான செயல் எனவும், தன்னுடைய லட்சியம் எனவும் காவல் துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.
அதன்மீது கொண்ட ஆசையின் காரணமாகவே காரைத் திருடி குறைந்த விலைக்கு விற்பதை வழக்கமாகக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் திருடிய காரை செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் வெறும் 20,000 ரூபாய்க்கு விற்றதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கோவையில் திருடிய குட்டி யானையை 30,000 ரூபாய்க்கு விற்றது தெரியவந்துள்ளது.
சுங்கச்சாவடியைத் தவிர்த்த ஏழுமலை
ஏழுமலை மீது சென்னையில் ஆதம்பாக்கம், வடபழனி, அம்பத்தூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 2018ஆம் ஆண்டு பூந்தமல்லி காவல் நிலையத்தில் இருந்த வழக்கு ஒன்றில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைக்குச் சென்ற ஏழுமலையைப் பிணையில் வெளியே எடுக்க ஆள் இல்லாததால், சிறையில் ஏற்பட்ட பழக்கம் காரணமாகச் சிறைத் துறை அலுவலர் ஒருவர் அவரை பத்தாயிரம் ரூபாய் கட்டி பிணையில் எடுத்ததை விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
காரைத் திருடிக்கொண்டு சுங்கச்சாவடி வழியாகச் சென்றால் சிக்கிவிடுவோம் எனத் தெரிந்து சுங்கச்சாவடியைச் சுற்றி அருகே உள்ள சிறு கிராமங்களின் வழியே செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் ஏழுமலை.
மது, உல்லாசம்தான் ஏழுமலையின் வழக்கம்
தினசரி நாளிதழ்களில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரத்தில் ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து அங்குச் சென்றுதான் திருடிய அடையாள அட்டைகளை வைத்து நம்பவைத்து அங்கு வேலைக்குச் சேர்ந்து அதன்பின்னர் ஒரேநாளில் காரைத் திருடுவது வழக்கம் என விசாரணை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் உள்ள பிரபல உணவகத்தின் உரிமையாளரிடம் கார் ஓட்டுநராக வேலை சேர்ந்து அவரது காரை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கார்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றைத் திருடி அதிகபட்சமாக 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை விற்று, அந்தப் பணத்தில் ஒருவார காலம் மது, உல்லாசமாக இருப்பதுதான் ஏழுமலையின் வழக்கம் என்கின்றனர் காவல் துறையினர்.
இதையும் படிங்க: 11 வருட காதல்... ஐந்தாண்டு இல்லறம்: முடிவுக்கு வந்த உறவு