சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி. சங்கர், மாதவரம் சுதர்சனம், சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர்.
மேலும் அங்கு நடைபெற்ற தடுப்பூசி போடும் பணிகளையும் பார்வையிட்டனர். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
"சென்னை திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அரசு மகப்பேறு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து இன்று ஆய்வுமேற்கொண்டோம். இந்தப் பகுதியில் மகப்பேறு மருத்துவத்தில் இந்த மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.
இந்த மருத்துவமனையில் பொது மருத்துவமனையை இணைத்து மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் தேவையான மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் பாதிப்படைவோர் விகிதத்தைவிட குணமடைவோர் எண்ணிக்கை இருமடங்காக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் தீவிர கரோனா தடுப்பு நடவடிக்கையால் தற்போது 56,585 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா பரவல் குறைவதற்கு இது ஒரு அடையாளமாகும்.
!['கரோனா பாதிப்பைவிட குணமடைந்தோர் விகிதம் 2 மடங்காக உள்ளது' - மா. சுப்பிரமணியன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-thiruvottiurhospital-healthministervisit-pic-script-tn10055_15062021115303_1506f_1623738183_418.jpg)
மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இன்று ஹைதராபாத், பூனேவிலிருந்து ஆறு லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை வந்த பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பிவைக்கப்படும்.
கரோனா இறப்பு அறிவிப்பு ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படியே செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வொரு விதிமுறை என எதுவும் இல்லை. கரோனாவில் தாய், தந்தையை இழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன.
கரோனா சிகிச்சைக்கு வந்து இறப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பலர் கரோனா உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் ஏதேனும் காரணங்களால் இறந்து வெளியே வரும்போது அவர்களுக்கு கரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.
எனவே லேசான முதற்கட்ட அறிகுறிகள் தெரிந்த உடனே மருத்துவமனையை பொதுமக்கள் அணுக வேண்டும்" எனத் தெரிவித்தார்.