சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்புச்சந்தையானது தொடங்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, தைப்பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் சிறப்புச்சந்தை போடப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக, சிறப்புச்சந்தை அமைக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்புச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, இந்தச் சந்தை கடந்த 29ஆம் தேதி தொடங்கப்பட்டது. குறிப்பாக பூக்களின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதில், மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.1200, முல்லை ரூ.1200, கனகாம்பரம் ரூ.1000, அரளிப் பூ ரூ.350, சாமந்தி ரூ.500, சம்மங்கி ரூ.270, ரோஜா ரூ.150, செண்டு மல்லி ரூ.60ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
திடீர் விலையேற்றத்திற்கான காரணம் குறித்துப் பேசிய வியாபாரிகள், "கடந்த ஆண்டு கரோனா தொற்றின் காரணமாக குறைந்த அளவே கடைகள் அமைக்கப்பட்டன. இங்கு கடை அமைக்க வேண்டுமென்றால் டோக்கன் கட்டணம் கொடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ரூ.1200ஆக இருந்த டோக்கன் கட்டணம் இந்த ஆண்டு ரூ.3000ஆக வசூலிக்கப்பட்டு இருக்கிறது. மழை காரணமாக பூக்கள் விரைவில் சேதம் அடைவதால் விலை ஏற்றத்தைத் தவிர வேறு வழியில்லை. மேலும் இதுபோன்ற காரணங்களால் பூஜைப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று மதியம் வரை இதே விலை தான் நீடிக்கும். மதியத்திற்குப்பிறகு இந்த விலையில் இருந்து சற்று குறைய வாய்ப்புள்ளது" என கூறுகின்றனர்.
பழங்களைப் பொறுத்தவரை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனால், ஆப்பிள் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.200 தாண்டியும் விற்பனையான சிம்லா ஆப்பிள் தற்போது ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் ஆர்வமாக ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளை வாங்கிச்செல்கின்றனர்.
இதையும் படிங்க:துர்கா பூஜையில் காந்தி சிலை அவமதிப்பு விவகாரம்: இந்து மகாசபா மீது வழக்குப்பதிவு