சென்னை: வெளிநாட்டில் இருந்து பெரிய அளவில் போதைப்பொருள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறைக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனா். இந்த நிலையில் சாா்ஜாவிலிருந்து அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த லவுபன் (42) எனும் நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்திருந்த அவரின் பதில்கள் முன்னுக்குபின் முரணாக இருந்துள்ளன. இதையடுத்து அவருடைய உடமைகளை முழுமையாகப் பரிசோதனை செய்தனா். பின்பு அவரை சென்னை விமானநிலைய மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனா். அங்கு அவரை எக்ஸ்ரே எடுத்து பாா்த்தபோது, அந்தப் பயணியின் வயிற்றுக்குள் கேப்சூல் மாத்திரைகள் விழுங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுங்க அலுவலர்கள், அந்த உகாண்டா பயணியை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தனா். அங்கு அவருக்கு இனிமா கொடுத்து சிறிதுசிறிதாக வயிற்றுக்குள் உள்ள கேப்சூல்களை வெளியே எடுத்தனா்.இவ்வாறு 4 நாட்களாக மொத்தம் 63 கேப்சூல் மாத்திரைகளை வெளியே எடுத்தனா்.
அந்த கேப்சூல்களை உடைத்துப் பார்த்தபோது அதனுள் ஹெராயின் போதைப்பொருள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். மொத்தம் 63 கேப்சூல்களில் 794.64 கிராம் ஹேராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.5.56 கோடி. இதையடுத்து சுங்க அலுவலர்கள் உகாண்டா பயணியைக் கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் சர்வதேச போதைக் கும்பலைச் சோ்ந்தவா் என்று தெரியவந்தது.
இவா் சென்னையில் யாரிடம் ஒப்படைக்க இந்தப் போதை பொருளைக் கடத்தி வந்தாா் எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதைப்போல் போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவரை சுங்கத்துறையினா் கைது செய்து ரூ.8 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் தங்கம் மற்றும் வெளிநாட்டுப்பணம் பறிமுதல் - 9 பேர் கைது