சென்னை:சென்னை எஸ்பி சிஐடி தலைமையகத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர், அருளரசு ஜஸ்டின்(55).
இவர் நேற்று இரவு மயிலாப்பூரில் உள்ள புது தெருவிற்கு மோட்டார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக பைக்கில் வந்த நபர் ஒருவர், அருளரசு ஜஸ்டினை வழி மறித்து 'நீங்கள் யார்? உங்களுக்கு இங்கு என்ன வேலை' என கேட்டு மிரட்டி உள்ளார். அதற்கு அருளரசு ஜஸ்டின் நான் துணை காவல் கண்காணிப்பாளர் எனக்கூறி உள்ளார்.
அந்த நபரை பார்த்து அருளரசு, 'நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்து செல்லுங்கள்' எனக் கூறியுள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், 'எங்க ஏரியாவுக்கு வந்து என்னைப் போக சொல்கிறாயா.... நீ அவ்வளவு பெரிய ஆளா?' என தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும் அங்கு இருந்த கல்லை எடுத்து, 'உன்னை இங்கேயே அடித்துக் கொன்று விடுவேன்' என காவல்துறை அதிகாரியை மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து அருள் ஜஸ்டின் மயிலாப்பூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டபோது, அவர் அதே பகுதியை சேர்ந்த ரின்ஸ் பேட்ரிக் (42) எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மணல் கடத்தல் வழக்கில் கனிமவளத் துறை உதவி இயக்குநர் கைது