சென்னை: இந்தியாவின் சுயசார்பு திறனுக்கு எடுத்துக்காட்டாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிபுணத்துவம் பொருந்திய ஊழியர்களால், மற்றொரு மென்பொருள் நிறுவனத்தின் உதவியோ, வழிகாட்டுதலோ இன்றி சுயமாக தானியங்கி தகவல் பரிமாற்று இணைப்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் 'ஆத்மநிர்பர்' (சுயசார்பு) கொள்கைக்கு ஏற்ப இந்த இணைய நெறிமுறையில் இயங்கும் தானியங்கி தகவல் பரிமாற்று இணைப்பு கருவி (IP-AMSS ) உலகத்தரத்திற்கு நிகராக வடிவமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
இத்தானியங்கி கருவி உலக அளவிலான விமான நிலையங்களுக்கு இடையே வலைப்பின்னலில் ஒரு பகுதியாக செயல்படுகிறது.
வானூர்தி தகவல்களை சில விநாடிகளில் பரிமாற்றவல்லது. இக்கருவி உலகெங்கிலும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் உள்ள விமான கட்டுப்பாட்டு மையங்கள், விமான நிறுவனங்களுக்கு இடையே வானூர்தி பற்றிய தகவல்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டிற்கான தகவல்கள், வானிலை தகவல்கள், வானூர்தி பாதுகாப்பை உறுதி செய்யும் தகவல்களை அதிவேகத்தில் பரிமாறிக்கொள்ளப் பயன்படுகிறது.
அத்தகைய கருவி அமைப்பை சென்னை விமான நிலைய வானூர்தி தகவல் தொடர்பு மையத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் இயக்குநர் குழு உறுப்பினர் சுரேஷ் நேற்று(மார்ச் 12) தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறியபோது, 'இது இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெருமைக்குரிய தருணமாகும்' என்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது இந்திய விமான நிலைய ஆணைய உயர் அலுவலர்கள், இந்திய விமான நிறுவனங்கள், இந்திய விமானப்படை, வானிலை ஆராய்ச்சி மைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.10 விழுக்காடாக குறைப்பு'