இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், ”பள்ளிக் கல்வித் துறையில் பணி நிரவல், பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரு பள்ளியில் ஒரு வருடம் பணி புரிந்தவர்கள் அடுத்த ஆண்டில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இந்த விதி தற்போது மாற்றியமைக்கப்பட்டு ஒரு ஆசிரியர் பணியில் சேர்ந்தது முதல் மூன்று ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி புரிந்தால்தான் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் 2019ஆம் ஆண்டில், வெளியிடப்பட்டுள்ள பணி மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணையில், மனம் ஒத்த மாறுதல், பதவி உயர்வில் சென்றவர்கள், பணியிட மாறுதல் கேட்பவர்களாக இருந்தாலும் மூன்றாண்டுகள் முடித்திருந்தால் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விதி.
இந்த விதிமுறையானது ஆசிரியரை பழிவாங்க எளிதில் பயன்படும். அதேபோல் உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரு உயர்நிலைப் பள்ளியில் குறைந்தபட்சம் எட்டு ஆசிரியர்களாவது பாடம் நடத்தும் வகையில், பணியமர்த்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.