இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து, அதனைச் செயல்படுத்தும்விதத்தில், 2020-21ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், மத்திய, மாநில நிதிக்குழுவின் நிதி, அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்ட நிதி ஆகியவற்றிலிருந்து 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்நிதியிலிருந்து ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் வசதி, இணைப்புச் சாலை வசதி, சிமெண்ட் பேவர் பிளாக் சாலை வசதி, தெருவிளக்குகள், வடிகால் வசதி, மயான மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள குக்கிராமங்கள், இணைக்கப்படாத பகுதிகளுக்கு இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்திட, 2020-21ஆம் நிதி ஆண்டில், 1,150 கி.மீ. நீளத்திற்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் 246 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் உள்ள குக்கிராமங்கள், இணைக்கப்படாத பகுதிகளுக்கு இணைப்புச் சாலை வசதியை ஏற்படுத்திட 2,500 கி.மீட்டருக்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் அமைக்கும் பணிக்காக 536.75கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.