ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை ஒட்டி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கிய தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து, எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் பாடுபட வேண்டும்.
அமமுக பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு, வேட்பாளர், விருப்ப மனு தாக்கல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும். அமமுக தலைமையிலான கூட்டணியில் சேர பல்வேறு கட்சிகளும் பேசி வருகின்றன. விரைவில் அதுகுறித்து தெரிவிக்கப்படும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடும் போது, அதிமுக அமமுக இடையே இருக்கும் கருத்து வேறுபாட்டால், திமுக வெல்லும் என்றனர். ஆனால் அங்கு நடந்ததே வேறு. அது போலத் தான் தற்போதைய நிலையும்.
எங்களுக்கு பொது எதிரி திமுக மட்டுமே. தற்போது இருக்கும் ஆட்சியை எதிர்த்து வருகிறோம். இருப்பினும் இந்த ஆட்சியை அமைத்தவர்கள் நாங்கள். நேற்று நடந்த இடைக்கால பட்ஜெட்டில், ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.
வெற்றி நடை போடுகிறது என்று கூறுவதைவிட, அரசு கடனில் தள்ளாடி வருகிறது எனக் கூறலாம். இந்த முறை தேர்தல் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால் அமமுகதான் வெற்றி பெறும்” என்றார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்:சசிகலா