இது தொடர்பாக தலீத் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் கருப்பையா கூறுகையில், "வன்கொடுமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவா சிந்தனையோடு நீதிமன்றம் செயல்படுகிறது என்பதை இந்த தீர்ப்பு வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.
குறிப்பாக ஒரு அரங்கத்துக்கு உள்ளே தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் மக்களை சாதிய ரீதியாக இழிவுபடுத்துவது குற்றம் என்று அரசியல் சாசன சட்டத்தில் வரையறுக்கப்பட்டு இருக்கும் நிலையில், அது வன்கொடுமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது ஏற்கக்கூடியது அல்ல" என்றார்.
முன்னதாக, இந்த தீர்ப்பு தொடர்பாக மத்திய அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியிருந்தார்.