கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் மூன்றாவது முறையாக இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ஊரடங்கில் இருந்து எப்போது வெளிவருவது அல்லது ஓரளவு தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கவும், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு தளர்வு
முன்னதாக, சிவப்பு மண்டலம் அல்லாத பகுதிகள், கரோனாவால் பாதிக்கப்படாத பகுதிகள் ஆகியவற்றில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் வரும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி விவசாய கூலி வேலை செய்வோர், பிளம்பர், கட்டுமான பணிகள் உள்பட பல்வேறு பணிகள் செய்வோருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல் சில தொழிற்சாலைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது குறித்தும் பிரதமரிடம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடைகளுக்கு அனுமதி
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துறைகளில் படிப்படியாக தளர்வு அளித்து வருகின்றன. பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்களில் உள்ள கடைகளைத் தவிர பிற கடைகள் அனைத்தும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும், மே 3ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு தொடங்கினால், மாநில அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.