காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் மின்சார வாகனங்களை மக்கள் பயன்பாட்டுக்காக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கா, துபாய், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அங்குள்ள தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன் எதிரொலியாக, துபாய் நாட்டைச் சேர்ந்த KMC மற்றும் M Auto Electric Mobility நிறுவனங்களின் தயாரிப்பில் ரூ.100 கோடி முதலீட்டில் ரெட்ரோபிட் முறையிலான மின்சார ஆட்டோக்களின் பயன்பாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னையில் டீசல், பெட்ரோல் ஆட்டோக்களால் மட்டும் 11 விழுக்காடு காற்று மாசு ஏற்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட மின்சார ஆட்டோக்கள் இரண்டு மணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் 100 கி.மீ. தூரம் சாலைகளில் பயணிக்கும். அதிநவீன தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள மின்சார ஆட்டோக்களில், சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தற்போது சாலைகளில் இயங்கும் டீசல், பெட்ரோல் ஆட்டோக்களை ரெட்ரோபிட் முறையில் ரூ.1.5 லட்சம் செலவில் மின்சார ஆட்டோக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.
இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் யாஸ்மின் ஜவஹர் அலி கூறுகையில்,
பெட்ரோல், டீசல் ஆட்டோவுக்கு ஏற்படும் பராமரிப்பு செலவை விட மின்சார ஆட்டோக்களின் செலவு குறைவுதான். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ. வரை பயணம் செய்ய முடியும். இதற்காக சென்னையில் பல்வேறு இடங்களில் சார்ஜ் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று பயணிகள் அமரும் வகையில் இந்த ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜி.பி.67 தொழில்நுட்பம் பெற்ற இந்த ஆட்டோ லித்தியம் பராஸ்பெட் பேட்டரிகள் கொண்டது. இது தூசு மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்கப்படும், என்றார்
மேலும், ஆட்டோ முழுவதும் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்பதால் ஓட்டுவதற்கு மிகவும் எளிதாக இருப்பதாக கூறினார்.