இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து, விவசாயிகள் வாரியாக வயலாய்வு பணி மேற்கொண்டு, 33 விழுக்காட்டுக்கும் மேல் சேதமடைந்த பயிர்கள் மற்றும் விவசாயிகளின் விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர், பட்டா/சர்வே எண், வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் விவரங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட எந்தவொரு விவசாயியும் விடுபடக்கூடாது என்ற முதலமைச்சர் உத்தரவை
உறுதி செய்யும் வகையில், சரியான பயிர் சேத விவரங்கள், விவசாயிகளின் விவரங்களை கணக்கீடு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, நெற்பயிர்களை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல்களில் வெள்ளநீர் முழுமையாக வடிந்த பிறகு, பயிர் சேத விவரங்களை முழுமையாக கணக்கிட்டு, சரிபார்க்க அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகளின் பயிர் சேத விவரங்களுடன் அவர்களின் வங்கிக் கணக்கு
விவரங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் விரைவாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவரங்கள் வங்கிக் கணக்குகளுடன் ஒத்திசைவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்தது போல், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய டிசம்பர் 28ஆம் தேதி மத்திய குழுவினர் தமிழ்நாடு வருகை வருகின்றனர். இந்த ஆய்வு முடிந்தபின், மத்திய குழுவின் அறிவுரைப்படி, புள்ளி விவரங்கள் இறுதி செய்யப்பட உள்ளது.
பாதிப்படைந்த விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்தபின், பயிர் சேத விவரங்கள் குறித்த முழுமையான அறிக்கை அரசுக்கு விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.