சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் இடையே பயணிகளின் வசதிக்காக, விமான நிலைய நிா்வாகம் பேட்டரி வாகனங்களை இயக்கி வருகிறது. இந்த வாகனங்கள் சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படுகிறது.
பயணிகளை கட்டணம் இல்லாமல், இலவசமாக உள்நாட்டு முனையத்தில் இருந்து சர்வதேச முனையத்திற்கும், சர்வதேச முனையத்திலிருந்து உள்நாட்டு முனையத்திற்கும் அழைத்து செல்கின்றன.
கடந்த மாதம் மீண்டும் தொடங்கிய சேவை
2 ஆண்டுகளுக்கு முன்பு, கரோனா தொற்று உச்சகட்டத்தை அடைந்ததை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் இந்த பேட்டரி வாகனங்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என மாறி மாறி வந்துகொண்டிருந்தது. ஒரு அலைக்கும், மற்றொரு அலைக்கும் இடையே தொற்று குறைந்தபோதும் கூட, நிறுத்தப்பட்ட இந்த சேவை தொடர்ந்து இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது, தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலின் வேகம் பெருமளவு குறைந்துள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேட்டரி வாகனங்களின் சேவைகள் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத்திலிருந்து மீண்டும் தொடங்கியது.
24x7 - இலவசம்
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு முனையம், சா்வதேச முனையம் இடையே இயங்கிக்கொண்டிருந்த பேட்டரி வாகனம், நேற்று (மார்ச் 17) மாலையிலிருந்து சென்னை விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வரும் பேட்டரி வாகனங்கள், சா்வதேச முனையம் வழியாக உள்நாட்டு விமான நிலையத்தை வந்தடையும். அதே, பேட்டரி வாகனம் மீண்டும் உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்பட்டு சா்வதேச முனையம் வழியாக மெட்ரோ ரயில் நிலையம் வந்தடையும்.
24 மணி நேரமும் இயங்கும் இந்த வாகனத்தில், பயணிகளுக்கோ, பயணிகளின் உடைமைகளுக்கோ (Luggage) எந்த விதமான கட்டணமும் கிடையாது. இது முற்றிலும் இலவச சேவையாக உள்ளது. ஏற்கனவே, 6 பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது மெட்ரோ ரயில் நிலையமும் இணைக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகாலை 5 மணியிலிருந்து நள்ளிரவு 11 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் இலவச பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுவது விமான மற்றும் மெட்ரோ ரயிலின் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.