சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளைச் சோதனைச் சாவடியில் இரவு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரி 8ஆம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய, ஓராண்டாக தேசியப் புலனாய்வு அமைப்பால்(என்ஐஏ) தேடப்பட்டு வந்த தீவிரவாதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கத்தார் நாட்டிலிருந்து இன்று(ஜன.6) சென்னைக்கு விமானத்தில் வந்த போது குடியுரிமை அலுவலர்களிடம் அந்தத் தீவிரவாதி சிக்கினான். கத்தார் நாட்டு தலைநகர், தோகாவிலிருந்து சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு இன்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் ஒன்று வந்தது.
அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை குடியுரிமை அலுவலர்கள் பரிசோதித்தனர். அப்போது, விமானத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த சகாபூதின்(35) என்ற பயணி, கேரள காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது. சகாபூதின் மீது திருவனந்தபுரம் காவல்துறையினர் கடந்த ஓராண்டுக்கு முன்பு, அனைத்து விமான நிலையங்களுக்கும் தேடப்படும் குற்றவாளி (Look ourt circular) என்று அறிவிப்பு கொடுத்து வைத்திருந்தனர்.
இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள் சகாபூதினை தனி அறையில் அடைத்து வைத்தனர். இதுகுறித்து கேரள மாநில காவல்துறையினருக்குத் தகவல் தரப்பட்டது. தொடர் விசாரணையில், சகாபூதின் கடந்தாண்டு கன்னியாகுமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் தொடர்புடையவர் எனத் தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த இவரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் தேடிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ அலுவலர்களும் வந்து தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனா். விசாரணைக்குப் பின்னர் கேரளா மாநில காவல்துறையினரிடம் சகாபூதினை ஒப்படைக்கவிருக்கின்றனா்.
எஸ்எஸ்ஐ வில்சன் சுட்டு கொன்ற வழக்கில் ஏற்கனவே திருவிதாங்கோடைச் சேர்ந்த அப்துல் சமீம்(32), இளங்கடையைச் சேர்ந்த தவுபீக்(28) ஆகியோர், கடந்தாண்டு ஜனவரி 14ஆம் தேதி, கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்தத் தகவலின்பேரில், இவ்வழக்கில் தொடர்புடைய சகாபூதின், காஜா முகைதீன், மெகபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாபர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக, என்ஐஏ அலுவலர்கள் கடந்தாண்டு ஜூலை 10 ஆம் தேதி குற்றப்பத்திரிகையை என்ஐஏ அலுவலர்கள் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்துவந்த சகாபூதின், இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'எஸ்ஐ வில்சனை இப்படித்தான் கொன்றோம்...!' - நடித்துக்காட்டிய கொலையாளிகள்