சென்னை: தமிழ்நாடு கோயில்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க கோரி டி.ஆர். ரமேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களை கோயில்களுக்கு அயல்பணியாக நியமிக்கும்போது, கோயில் நிதியிலிருந்து தான் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது என்பதால், இது இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்கு விரோதமானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “கோயில்களிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அது அரசின் கடமை” என வலியுறுத்தப்பட்டது.
மேலும், “இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள் அயல் பணியாக கோயில்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு நியமனங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும்” எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
பதிலளித்த அரசு வழக்கறிஞர்
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “அறங்காவலர்களை நியமிப்பதற்காக, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. நான்கு வாரங்களில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை தள்ளிவைத்த நீதிபதிகள்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோயில் அறங்காவலர்கள் நியமனங்களை கண்காணிப்பதாக தெரிவித்தனர். கோயில்களின் அன்றாட பணிகளை கவனிக்கவும், நிலம், சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போதுமான ஊழியர்கள் தேவை என்பதால், அயல் பணியாக கோயில்களுக்கு இந்து சமய அறநிலைய துறை ஊழியர்கள், அலுவலர்கள் நியமிப்பதற்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
மேலும், அறங்காவலர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி விசாரணையை டிசம்பர் 2ஆவது வாரத்திற்கு வழக்கை தள்ளிவைத்தனர். இத்ற்கிடையில் அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும் எனவும் நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு - முன்னாள் சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடி