சென்னை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், தருமபுரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. எனவே, அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் அருகில் குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியிருப்பதாவது, 'சென்னை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருவள்ளூர் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகமாக உள்ளது.
எனவே அதனைக் கட்டுப்படுத்த பள்ளி வளாகத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களில் அருகில் அமைந்துள்ள பகுதியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் காய்ச்சலை பரப்பும் வகையில், குப்பைகள், உடைந்த தொட்டிகள், நீர் தேங்கும் வகையிலான பொருட்கள் போன்றவை இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இது போன்றப் பொருட்களை பள்ளி வளாகத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து பள்ளி வளாகத்திற்கு அருகில் ஏடீஎஸ் கொசு உற்பத்தியாவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுக்கும் முறைகளை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டது. மாணவர்கள் அவ்வப்போது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பு கை கழுவுதல் அவசியம்.
மேலும் வகுப்பறைகளை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருத்தல் வேண்டும். வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனை தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். தலைமையாசிரியர் தேங்கிய நீரை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் பானைகள் மற்றும் தண்ணீர்த் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும். இதன்மூலம் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க முடியும்.
நல்ல நீர் தேங்குவதால் தான் டெங்கு கொசுக்கள் உருவாகின்றன. கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால் தான் டெங்கு காய்ச்சல் உருவாகின்றது என்ற விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதன் தொடர்ச்சியாக பள்ளி வளாகத்திலும் வீடுகளிலும் நீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு டெங்கு கொசுக்கள் உருவாகாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
பள்ளிக்கு மாணவர்கள் காய்ச்சலோடு வந்தாலோ, பள்ளிக்கு வந்த பின்பு காய்ச்சல் ஏற்பட்டாலும் அதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். அவர்கள் அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தெரிவித்த பின்னர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ - இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே
தொடரும் நீட் ஆள்மாறாட்ட கைது... இதுவரை மாணவர்கள்... இப்போது மாணவி!