ஹைதராபாத்: தெலங்கானா தமிழ்ச் சங்க மூன்றாம் ஆண்டு விழா, நன்னெறிச்சுடர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், தெலங்கானா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.கே. போஸ் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் தருமசீலன், பொதுச்செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் நேரு சாஸ்திரி, துணைப் பொருளாளர் குமாரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனர். தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் தருமசீலன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைவர் போஸ் தலைமை உரையாற்றினார்.
மாணவர்களுக்கு விருது
தமிழ்ச் சங்கத்தின், தமிழ் வகுப்புகள், மாணவர்களுக்கு நற்சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. ஆத்திச்சூடி ஒப்புவித்த சுமார் 25 மாணவர்களுக்கு திருவையாறு ஒளவை கோட்டம் சார்பில் நன்னெறிச்சுடர் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ் வகுப்புகள் மாணவர்கள் மாறுவேடம் அணிந்து, ஆத்திச்சூடி ஒப்புவித்தல், திருக்குறள் ஒப்புவித்தல், பாரதியார் கவிதை வாசித்தல், இசை மீட்டல், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் என ஆண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக, ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று முதல் மூன்று இடங்களை வென்ற சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆண்களுக்கு நினைவுக் கேடயம் பரிசுகள் வழங்கப்பட்டன. சபையோருக்கான வினாடி வினாவில், தமிழ்ச் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமரன், அருணாதேவி, ஜெயலட்சுமி, நிர்மலா ஆகியோருக்கு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை அருணா குமாரராஜன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரவு விருந்துடன் 2022ஆம் ஆண்டிற்கான காலண்டர் வழங்கப்பட்டது.