பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை அடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ஆம் தேதிக்கு பதில், ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார். இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறியுள்ளதாவது, “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15 நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, போதுமான கால அவகாசமாக தோன்றவில்லை.
இது தொடர்பாக, சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இன்று தயாராக இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பினால் நீதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளின் நலனுக்காக இந்த சிறிய கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இந்தப் பேரிடர் காலத்தில் ரத்து செய்ய வேண்டும். தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்றாலும், கரோனா தொற்று முற்றிலும் கட்டுக்குள் வந்த பிறகு, ஆசிரியர், மாணவர் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே பொதுத்தேர்வினை நடத்திட வேண்டும்.
கரோனா தொற்று கட்டுக்குள் வராத சூழலில், போக்குவரத்து வசதி மற்றும் ஆசிரியர், மாணவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில், திட்டமிட்டபடி ஜுன் 15ஆம் தேதி பொதுத்தேர்வு நடத்தப்படுமானால், மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்வோம்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிக் கட்டணத்தை உயர்த்தமாட்டோம்- தனியார் பள்ளிகள்!