இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய நிதி அமைச்சகம் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் காரணம் காட்டி அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை (சுமார் 18 மாதங்கள்) மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது. இது, தனது உயிரைப் பணயம்வைத்து பணியாற்றிவரும் பணியாளர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் அமைந்துள்ளது.
பேரிடர் காலங்களில் அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வழங்கியுள்ள வரிச்சலுகை, கடன் தள்ளுபடியை திரும்பப் பெறுதல், புதிய நாடாளுமன்றம் கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துதல், ஆகியவற்றின் மூலம் சரிசெய்யலாம்.
பிரதமருக்கான பங்களா, அமைச்சர்களுக்கான புதிய வீடு கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தி அதற்கான நிதியையும் இச்சூழலில் பயன்படுத்தலாம். புல்லட் தொடர்வண்டி திட்டத்திற்கு ஒதுக்கீடுசெய்த நிதியை இத்திட்டத்திற்கு தற்காலிகமாகப் பயன்படுத்தலாம்.
பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ள செல்வத்தில் ஐந்து விழுக்காட்டை வசூலித்து இத்திட்டத்திற்குப் பயன்படுத்துதல் எனப் பல்வேறு வழிகளை மத்திய அரசு கையாளலாம்.
ஆனால், ஏற்கனவே பல்வேறு கடன் சுமைகளில் சிக்கி நிற்கும் அரசு ஊழியர்களின் நிலையைக் கருத்தில் கொள்ளாமலும், ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேசாமலும், தன்னிச்சையாக மத்திய அரசு பஞ்சப்படி ரத்து என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே, பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு உயிரைக் கொடுத்து பணிசெய்யும் ஊழியர்களின் அகவிலைப்படி ரத்து என்ற அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் ” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சரக்குக்கு கிராக்கி! - காவல் துறையின் வளையத்துக்குள் மதுபான கிடங்கு!