இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”2018-19 ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு வரும் 14, 15 ,16 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்குரிய அனுமதிச் சீட்டுகளை, தேர்வர்கள் தங்களின் பயனாளர் குறியீட்டு எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ’www.trb.tn.nic.in’ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும், கணினி தேர்விற்காக பயிற்சித்தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், தங்களின் பயனாளர் குறியீட்டு எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே என்பதை தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் தேர்வு விதிமுறைகளையும், அறிவுரைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றி தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வினை எழுத சுமார் 64 ஆயிரம் தேர்வர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். 64,000 தேர்வர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் ஆவர். ஆண் தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல், வேறு மாவட்டத்திற்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சொந்த மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம்