இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், "தமிழ்நாட்டில் மே 5ஆம் தேதிமுதல் நடைபெறவிருந்த 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை மாணவர்களது நலன்கருதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பினை பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்கிறது.
கரோனா நோய்ப்பரவல் தீவிரம் காரணமாக மத்திய அரசு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மேலும் 10ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.
எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மே 5ஆம் தேதிமுதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.
பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு அரசு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாகவும், செய்முறைத் தேர்வுகள் மட்டும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளதை வரவேற்கின்றோம்.
கரோனா நோய்த்தொற்று அதிகமாகி உள்ள சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் கோடை விடுமுறை அறிவிக்க தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.