சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "புதிய அரசு பொறுப்பேற்று , எந்த வித லகரங்களுக்கும் இடம் அளிக்காமல், கடந்த ஆண்டு நேர்மையான முறையில் கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தியது.
அதே வேளையில் இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு மட்டுமே நடைபெறும் என்ற அறிவிப்பு அனைவரிடமும் அதிர்ச்சியையும் மன உலைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் மாறுதல் கலந்தாய்வுகளுக்கான அட்டவணையை கல்வித்துறை வெளியிடும் போது, முதல் பொது மாறுதல் கலந்தாய்வை முன்னிறுத்தி பின்பு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை எவருக்கும் பாதிப்பு இல்லாமல் வெளியிடப்படும்.
ஆனால் இந்த கல்வியாண்டில் மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு அப்பாற்ப்பட்டு பொது மாறுதல் கலந்தாய்வை புறந்தள்ளி, பதவி உயர்வு கலந்தாய்வை முன்னிறுத்துவது ஏற்புடையது அல்ல. மேலும், எமிஸ் மூலம் கலந்தாய்வு நடைபெறும்போது அரசுக்கு எந்தவித பொருள் செலவோ இழப்பீடோ எதுவும் இல்லை. அதனால், ஆசிரியர்களின் பணி அவர்களின் மனநிலை, மற்றும் குடும்ப சூழ்நிலை ஆகியவைகளை கருத்தில் கொண்டு முதலில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி, பின்பு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் கலந்தாய்வு வெளியிடப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கடந்த பல கலந்தாய்வுகளில் கடைபிடிக்கப்பட்டது போல் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி மாவட்ட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.
மேலும், மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உடனடியாக காண்பிக்கப்பட வேண்டும். தொடக்கக்கல்வித்துறையில் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் அளித்தவர்களுக்கு இதுவரை மாறுதல் ஆணைகள் வழங்கப்படவில்லை. தற்போது கலந்தாய்வு முடிவு பெறும் நிலையிலும் இதுவரை மனமொத்த மாறுதல் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாதது என்பது மனமொத்த மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2010 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்யப்பட்ட உத்தரவு வழங்கப்படாமல் உள்ளதால், 2 ஆண்டுகளாக தேர்வு நிலை பெற இயலாமல் உள்ளனர். பாதிக்கப்பட்டஆசிரியர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.