ராணிப்பேட்டை மாவட்டம், புலிவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விபத்தின் போது, அங்கு ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வரும் முல்லை, அறிவுப்பூர்வமாக செயல்பட்டு 26 மாணவர்களை எவ்வித காயமும் இன்றி காப்பாற்றினார். அப்போது படுகாயமடைந்த அவர் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி விபத்தின்போது மாணவர்களை காப்பாற்றிய படுகாயமடைந்த ஆசிரியர் முல்லைக்கு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்காக ஏற்பட்ட செலவினத்தை வழங்கும் விதமாக, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 14 லட்சத்து 58 ஆயிரத்து 334 ரூபாய்க்கான காசோலையை, ஆசிரியை முல்லையிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: வேதாரண்யத்தில் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம் திறப்பு!