எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை அறிவியல் அறிஞர் சௌமியா சுவாமிநாதன் கூறும்போது, "நாட்டில் தற்போது ஊட்டச்சத்து குறைபாடும், உடல் பருமன் பிரச்னையும் ஒருசேர வந்துள்ளது.
பொதுவாக உயர் வருவாய் பிரிவில் உள்ள நாடுகளில் உடல் பருமன் பிரச்னை ஏற்படும். குறைந்த வருவாய் ஈட்டும் நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என்றும் நினைக்கிறோம்.
ஆனால், அண்மைக்காலமாக குறைந்த அளவு வருவாய் ஈட்டும் மத்திய தர நாடுகளிலும் உலகெங்கிலும் இவை இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்படுகின்றன. இதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கை நாம் எடுக்க வேண்டும்.
உலகில் 230 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளது. இந்நேரத்தில், 15 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர்.
ஊட்டச்சத்து பிரச்னை குறைந்துவரும் வேளையில், உடல் பருமன் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும், வருங்காலத் தலைமுறையினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியமான உணவுகளைவிட குறைந்த விலையில் கிடைப்பதால், ஏழை மக்களும் இதனை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண அதிக கொழுப்புடைய, அதிக சக்கரை கொண்ட, அதிக உப்பு கொண்ட ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்களுக்கு வரிவிதிக்கப்பட வேண்டும்.
இது தவிர, ஊட்டச்சத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஊட்டச்சத்து குறித்த கணக்கெடுப்பு ஆகியவற்றை அரசு செய்ய வேண்டும்.
ஊட்டச்சத்து பிரச்னையை களைய நாடு முழுவதும் ஒரே மாதிரியான திட்டத்தை வகுக்காமல், அந்தந்தப் பகுதி சார்ந்த, பரந்துபட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உள்ளூர் உணவுகள் மூலமாக ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன், ஏராளமான அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அஜித் பட நாயகியா இது? - உடல் பருமனுக்கு குட் பை சொல்லி சாதனை