இதுதொடர்பாக தன்னாட்சி இயக்கத்தின் தலைவர் க. சரவணன் வெளிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள்(புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்களாக) கடந்த 2019 டிசம்பரில் நடந்தது.
தேர்தல் நடந்த கிராம ஊராட்சிகளில், புதிய பிரதிநிதிகள் பொறுப்பேற்று ஓராண்டு முடியப்போகிறது. இந்த ஓராண்டில், சட்டப்படி நடக்கவேண்டிய நான்கு கிராமசபைகளில், ஜனவரி 26 கிராம சபை மட்டுமே நடைபெற்றது.
மே 1, ஆகஸ்ட் 15 கிராம சபைகள், கரோனா தொற்று சூழலில், அரசால் ரத்து செய்யப்பட்டன. அக்டோபர் 2 அன்று கிராமசபைகள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த சூழலில், எதிர்பாராத வகையில் அக்டோபர் ஒன்றாம் தேதியன்று இரவு, கரோனாவை காரணம் காட்டி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அவை ரத்து செய்யப்பட்டன.
ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இன்றுவரை, அனைத்து ஊராட்சிகளிலும் அலுவலர்கள் ஆட்சிதான் நடைபெறுகிறது எனவும், ஊராட்சித் தலைவர்கள் செயல்பட முடிவதில்லை எனவும் கடந்த நவம்பர் 1 அன்று தன்னாட்சி நடத்திய ‘கிராமசபை மீட்பும் ஊராட்சி உரிமைகளும்’ என்ற இணையவழி கருத்தரங்கில், பல ஊராட்சி மன்றத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கூட, ஊராட்சி தொடர்பான ஒரு வழக்கில் "மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றும் சுல்தான்கள் அல்ல. தலைவர்கள் ஒன்றும் அவர்களின் குத்தகைதாரர்கள் அல்ல" என்று அலுவலர்களைக் கண்டித்து இதே கருத்தைக் கூறியிருந்தது.
ஆனால், தற்போதோ தமிழ்நாட்டின் பல ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவருக்கே தெரியாமல் கிராமசபைகள் நடைபெற்றதாக அரசு கணக்கு காட்டுகிறது.
மத்திய அரசின் GPDP (Gram Panchayat Development Plan) க்கான அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், நவ. 23 மாலை 4:30 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் சுமார் 318 ஊராட்சிகளில் GPDP சிறப்பு கிராமசபைகள் நடந்து முடிந்துள்ளதாகவும், 11 ஆயிரத்து 452 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் பதிவேற்றப்பட்டுள்ளது.
14 வது மத்திய மான்ய நிதிக்குழு நிதியைப் பயன்படுத்த, கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (GPDP/ தமிழ்நாட்டில் VPDP) தயாரிப்பது அவசியம். இதற்கு கிராம சபையைக் கூட்டுவதும் அவசியம்.
தமிழ்நாட்டில் கிராம சபைகள் நடக்கவில்லையெனினும், நிதியைக் கருத்தில்கொண்டு சிறப்பு கிராமசபைகள் நடந்ததாக அரசு பொய்க் கணக்கு காட்டுகிறதா என்ற கேள்வி எழுகிறது. எனவே, தன்னாட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.
1. GPDP/VPDP சிறப்பு கிராமசபைகள் தமிழகத்தில் நடந்துள்ளனவா? அவற்றை ஊராட்சி அளவில் ஒருங்கிணைத்தது யார்? இதில் ஊராட்சி மன்றத்தின் பங்கு என்ன? நடந்து முடிந்துள்ள சிறப்பு கிராமசபைகள் குறித்த விவரம், புகைப்படங்கள், கிராமசபை தீர்மான நகல்கள் ஆகிய விவரங்களைத் தமிழ்நாடு அரசு உடனே வெளியிட வேண்டும்.
2. அப்படி நடக்கவில்லையெனில், இந்த விவகாரம் குறித்து முறையாக விசாரணை நடத்தி, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3. முக்கியமாக, மக்களாட்சியை கேலிக்கூத்தாக மாற்றாமல், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும், சட்டப்படி கிராமசபையை நடத்த உடனடியாக அரசு உத்தரவிட வேண்டும்". எனத் தெரிவித்துள்ளார்.