இது தொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தேர்தல் அலுவலர் ஆகியோர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. அஞ்சல் மூலம் தங்கள் வாக்கைப் பதிவுசெய்ய விரும்பும் வாக்காளர்கள் (முத்தவல்லிகள்) வக்ஃபு கண்காணிப்பாளர் அலுவலகங்களிலிருக்கும் இணைப்பு-2இல் குறிப்பிட்டுள்ள படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அந்தந்த பகுதிகளைச் சார்ந்த மண்டல வக்ஃபு கண்காணிப்பாளர்களிடம் ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5 மணிவரை அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
அவர்களுக்கான வாக்குச் சீட்டுப் பதிவு அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளைத் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போடலாம் அல்லது அஞ்சல் மூலமாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 10 மணிக்குள் சேரும்படி அனுப்ப வேண்டும்.
அஞ்சல் வாக்கு பெறுவதற்கான விண்ணப்பத்தைத் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது மண்டல வக்ஃபு கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 394 கோடி ரூபாய் வரவு