காவிரி மேலாண்மை ஆணையம் வரும் ஜூன் 10ஆம் தேதி தலைநகர் டெல்லியில் கூடவுள்ளது. இதில் தமிழ்நாடு பொதுப்பணித் துறை சார்பில் அத்துறை முதன்மைச் செயலர் மணிவாசகன் கலந்துகொள்கிறார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவது தொடர்பான பிரச்னையை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூரிலிருந்து வரவுள்ள தண்ணீர் கடைமடைகள் வரை சென்றுசேருவதற்கு ஏற்றவகையில் அனைத்துக் கால்வாய்களும் தூர்வாரும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
டெல்டா மாவட்டங்களில் சுமார் மூன்று லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கடந்த சில நாள்களாக ஒகேனக்கல்லில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியுள்ளது.
மேலும், தென்மேற்குப் பருவமழையினாலும் கூடுதல் தண்ணீர் கிடைக்கும் என்ற காரணத்தால் எதிர்பார்த்தபடி டெல்டா மாவட்டங்களில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கர்களில் குறுவை சாகுபடி செய்திட முடியும் என அலுவலர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 10ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
கடந்தாண்டு காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு 275 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேளாண் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பெருமிதம்