தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கக் கூடிய 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையால் கொள்முதல் செய்யப்படும் இந்த மடிக்கணினிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. மடிக்கணினிகளானது அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளின் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சிகள் சில மாவட்டங்களில் உரிய நேரத்தில் நடத்தப்படாததால்
பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மடிக்கணினிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை சமூக விரோதிகள் திருடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை சார்பில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், கடந்த 2011 - 2012 கல்வியாண்டு முதல் நடப்புக் கல்வியாண்டு வரை, பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகளில் எவ்வளவு திருடு போயுள்ளன என்பது குறித்து விவரங்களை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ' ஆண்டுதோறும் 5 லட்சத்து 50 ஆயிரம் மடிக்கணினிகள் இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் பள்ளிகளிலிருந்து திருடப்பட்டிருக்கிறது ' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முள்புதரில் கிடந்த அரசின் இலவச மடிக்கணினிகள்...! - கயவர்களை தேடும் காவல் துறை