கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் இரண்டாம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 20ஆம் தேதிக்குப் பிறகு சிலத் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது.
குறிப்பாக ஐடி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா பரவலைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை என்பதால், மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்குத் தளர்வுகள் கிடையாது என்றும்; மே 3ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் தொற்று பரவலினைக் கருத்தில் கொண்டு டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளன. தமிழ்நாட்டில் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க, நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், தற்பொழுது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதரக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ஆம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஆகவே, தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள் (Work From Home ) வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையினை மே 3 வரை தொடர வேண்டும். தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவினை நாம் பின்பு மீட்டெடுத்து விட முடியும். மக்களின் பாதுகாப்பு மற்றும் உயிர் தான் பெரிது " எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் 27 பேருக்கு கரோனா தொற்று; அலுவலகம் தற்காலிக மூடல்