சென்னை சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள்,
”முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் கூட இல்லாத அளவுக்கு எடப்பாடி ஆட்சியில் மக்கள் விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. மக்களின் பிரச்னைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஒடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. திருமுருகன் காந்தி மக்களுக்காக போராடக்கூடியவர். அவர் மீது அற்பக் காரணங்களுக்காக 40 பொய் வழக்குகளை மத்திய, மாநில அரசுகள் புனைந்துள்ளன.
ஈழத்தமிழர்களுக்காக மெரினாவில் அஞ்சலி செலுத்தினால் வழக்கு, பேசினால் வழக்கு, கூட்டங்களில் கலந்துகொண்டால் வழக்கு என இந்திய அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள இறையாண்மையைக் கூட குற்றமாக்கி வழக்குத் தொடுத்து வருகிறார்கள். அந்த வழக்குகளை தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். இதுபோன்ற பொய் வழக்குகளைப் புனைந்து மக்களுக்காக போராட்டம் நடத்தும் அமைப்புகளை மிரட்டும் போக்கை அரசு கைவிட வேண்டும். திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள அனைத்தும் பொய் வழக்குகள் என்பதை சட்டப்படி நிரூபிப்போம். இங்குள்ள யாரும் தீவிரவாதக் கூட்டம் அல்ல, முறையாகப் பதிவு பெற்ற அரசியல் இயக்கங்கள் என்பதை இந்த அரசுகள் உணரவேண்டும்.
மேலும், திருமுருகன் காந்தி தனி மனிதர் அல்ல அவர் பின்னால் நாங்கள் அனைவரும் இருக்கிறோம் என்பதை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்துகிறோம் “ என்றனர். மேலும் இக்கூட்டத்தில் மதிமுக, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இந்தியாவிற்கு முற்போக்கு திசையை காட்டும் தமிழ்நாடு- திருமுருகன் காந்தி